வங்கி சேமிப்பு கணக்கில் கணக்கு வைத்துள்ள ஒருவர் தான் இறந்த பிறகு தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஓர் அரசியல் கட்சிக்கோ அல்லது கோவிலுக்கோ அல்லது டிரஸ்ட்க்கோ வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் அவர் இறந்து பிறகு பணத்தை தர முடியாது என்று கூறி வங்கி மறுக்க முடியுமா? 


ஓர் அரசியல் கட்சிக்கும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கும் இடையேயான பிரச்சினை தான் இந்த வழக்கு. 

துஷ்கர் காந்தி என்பவர் ஒரு சேமிப்பு கணக்கை யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் வைத்திருந்தார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு உறுப்பினராக இருந்தார். தான் இறந்த பிறகு தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை கல்கத்தா மாவட்ட செயலாளரிடம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு அவர் 20.1.2014 ல் இறந்து விட்டார். அதனால் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா மாவட்ட செயலாளர் துஷ்கர் காந்தியின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை தங்கள் கட்சிக்கு தர வேண்டும் என்று மேலாளரிடம் ஒரு மனுவை கொடுத்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட வங்கி மேலாளர் ஒரு கட்சியை நாமினியாக நியமித்தது வங்கி வரைமுறைச் சட்டம் பிரிவு 45ZA ன்படியும், வங்கி நிறுவனங்கள் விதிகளின், விதி 2(1) ன்படியும் செல்லாது, அதனால் பணத்தை தர முடியாது என்று கூறி பணத்தை வழங்க மறுத்தது. 

வங்கியின் இந்த செயலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தது. 

வழக்கை நீதிபதி திரு. தீபன்கர் தத்தா விசாரித்தார். 

பொதுக் கூறுகள் சட்டம் பிரிவு 3(42) ல் நபர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது வங்கிகளுக்கும் பொருந்தும். இந்த பொதுக் கூறுகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நபர் என்பதும், வங்கி வரைமுறைச் சட்டத்தின் பிரிவு 45ZA(1) ல் கூறப்பட்டுள்ள நபர் என்பதும் ஒரே பொருளைத்தான் தருகிறது. ஒரு வாடிக்கையாளர் இறந்த பிறகு அவரால் செய்யப்பட்ட நியமனத்தை செல்லாது என்று கூற வங்கிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. இதுகுறித்து ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம் " சந்திரம்மா Vs ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் (AIR-1988-AP-289)" மற்றும் உச்சநீதிமன்றம் " பனாராசிதாஸ் Vs வெல்த் டேக்ஸ் ஆபிசர், மீரட் (AIR-1965-SC-1387)" ஆகிய வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது. 

ஒரு வங்கியின் வாடிக்கையாளர், ஒரு தொகையை வைப்பீடு செய்யும் போது Form DA-I ல் தான் இறந்த பிறகு, தன்னால் வைப்பீடு செய்யப்பட்ட தொகையை வங்கி யாருக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நபரின் பெயரை குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிட்டுள்ள நபரிடம் வங்கி பணத்தை ஒப்படைக்க வேண்டும். வங்கி வரைமுறைச் சட்டத்தின் பிரிவு 45ZA (I)  ல் கூறப்பட்டுள்ள நபர் என்ற விளக்கத்தில் ஒரு அரசியல் கட்சியும் வரும். 

ஆனால் அதே நேரத்தில் வங்கி நிறுவன விதிகளின் விதி 2 மற்றும், இந்திய ரிசர்வ் வங்கியால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஆகியவற்றில் நபர் என்பது தனிப்பட்ட ஒரு நபர் ஆவார் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறாகும். சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை செயல்படுத்துவதற்காகத்தான் விதிகள் உருவாக்கப்படுகின்றது. எனவே ரிசர்வ் வங்கி சுற்றறிக்கைகள் மூலம் சட்டத்திற்கு மாறுபட்ட ஒரு விதியை உருவாக்க முடியாது. வங்கி வரைமுறைச் சட்டத்தின் பிரிவு 45ZA (I) ல் நபர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை, தனிப்பட்ட நபர் என பொருள் கொண்டு அதன் உண்மையான பொருளை சுருக்கிவிட முடியாது. எனவே வங்கி நிறுவன விதிகளின் விதி 2(I) ல் கூறப்பட்டுள்ள தனிப்பட்ட நபர் என்பதற்கு, பொதுக் கூறுகள் சட்டம் பிரிவு 3(42) ல் நபர் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளவை பொருந்தும் 

எனவே ஒரு வாடிக்கையாளர் தான் இறந்த பிறகு தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை யார் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு நியமனம் செய்துள்ளாரோ அவரிடம் பணத்தை வழங்க வேண்டும் என்றும், அந்த நபர் என்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

W. P. NO - 983/2015

dt- 30.3.2016

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) Vs யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பலர் 

2017-ACD-497
--
Regards

Saravvanan R
Advocate & Legal Consultant

+91-9994287060

Rajendra law office
8/13, Bharathi Salai
,
Near West Mogappair Bus terminus,
Mogappair 
​We​
st,
Chennai - 600037